ஊர்விட்டு போனோம் – யாழ்ப்பாண இடப்பெயர்வு 1995

ஊர்விட்டு போனோம் – யாழ்ப்பாண இடப்பெயர்வு 1995

அப்போது எனக்கு வெறும் ஆறு வயசுதான், சாதாரணமாக விடிந்து சாதாரணமாகவே கழிந்தது மாலையாகிய அந்த நாளில் அயலில் உள்ள என் வயதையொத்த சிறுவர்களுடன் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தேன், நான் சாதரணமான நாள் என குறிப்பிடுவது நாளொன்றில் ஐந்து தடவைக்கு குறையாத விமானத்தாக்குதல்களையும் மட்டுப்படுத்தப்பட்ட செல்லடிச்சத்தங்களையும் கொண்ட ஒரு நாள் என கணக்கில் கொள்க,

வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரத்திலேயே வெளியால் சென்றிருந்த அப்பா பதட்டமாக வந்து “ஆமி எல்லாத்தையும் உடைச்சுக்கொண்டு வந்துட்டானாம், சனத்தை எல்லாம் இடம்பெயரட்டாம், எண்டு பெடியள் அறிவிக்கிறாங்கள், தேவையான சாமானை மட்டும் எடுத்துக்கொண்டு கெதியா வெளிக்கிடுங்கோ” என்றார்,

“விதவைத்தாய்களின் வேதனை அறிந்தவள் நான்” என்ற தொணிப்பொருளுடன் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அம்மையாருடனான விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததன்பின், சிறிலங்கா இராணுவம் “சூரியக்கதிர்” எனும் வலிந்த தாக்குதலை யாழ்ப்பாணத்தின்மீது ஆரம்பித்திருந்தது, தினம் தினம் செல்லடிகளாலும் விமானத்தாக்குதல்களாலும் அதிர்ந்துகொண்டிருந்த யாழ்ப்பாணம் கொஞ்சம்கொஞ்சமாக இராணுவத்தின் கையில் வீழ்ந்துகொண்டிருந்ததன் பாரிய தாக்கம்தான் அன்றைய இடப்பெயர்வாக வந்து நின்றது.

அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டே அக்காவை அருகே இருந்த அம்மம்மா வீட்டுக்கு போய் விசயத்தை சொல்லச்சொன்னா, நாங்கள் அம்மம்மா தாத்தா அன்ரிமார் அம்மா அப்பா அண்ணா அக்கா என்று பெரிய குடும்பம், அப்போதைய யாழ்ப்பாணத்தின் குடும்ப முறைகளில் பெரும்பாண்மையானது இப்படிப்பட அமைப்புமுறையாகத்தான் இருந்தது.

தாத்தா சொல்லிவிட்டார் தன்ர உயிரே போனாலும் தான் யாழ்ப்பாணத்தை விட்டு வரமாட்டேன் என்று, யாழ்ப்பாணம் என்பது எமக்கு தனியே வெறும் ஊராக மட்டும் இருக்கவில்லை அது எம் உணர்வாகவும் பிரவாகித்திருந்தது என்பதை அந்த நாட்களில் பல முதியவர்களின் பேச்சில் காணமுடியும், அந்த முதியவர்களது பிள்ளைகள்தான் மண்ணுக்காய் அங்கே உயிரை வெறுத்துப்போராடிக்கொண்டிருந்தார்கள், எங்கள் தாத்தாவும் அதற்கு விதிவிலக்கல்ல, வரவேமாட்டேன் என அடம்பிடித்தவர் பின் நாங்களும் இங்கே இருந்துவிடுகிறோம் என சொல்லவும் வேண்டாவெறுப்பும் கவலையுமாய் வெளிக்கிட இசைந்தார்,

எல்லோரும் தேவையான பொருட்களை எடுத்து பெட்டிகட்ட ஆரம்பித்தார்கள், எனக்கு அப்போது என்னுடன் கொண்டுபோகவேண்டிய அவசியத்தில் இருந்தது நான் வளர்த்த பூனைக்குட்டி மட்டும்தான், ஓடிப்போய் அதைத்தூக்கிக்கொண்டு வரவும், அம்மா கண்ணீருடன் “தம்பி இதை கொண்டு காவேலாதப்பு, திரும்ப வந்து கூட்டிக்கொண்டு போவம், இப்ப விட்டுட்டு வா” எனச்சொல்லவும் என்னால் அதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, ஆனால் என்பேச்சு அங்கே எடுபடவில்லை, பூனைக்குட்டி மற்றும் நாய்கள் இரண்டு என அவற்றை விட்டு விட்டு, 1995 ஓக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இரவு 8 மணியளவில் எங்கள் அயலவர்களுடன் சேர்ந்து எங்கள் ஊரைவிட்டு வெளியேறினோம்,

யாழ்ப்பாண நகரமெங்கும் சனத்திரள் கூட்டம் கூட்டமாக நடந்துகொண்டிருந்தது, வசதிபடைத்தவர்கள் தமது வாகனங்களில் சென்றுகொண்டிருந்தாலும் பெரும்பாண்மையான மக்கள் கால்நடையாகத்தான் வெளியேறிக்கொண்டிருந்தார்கள், விடுதலைப்புலிகளின் அறிவித்தல் நகர்முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது,இராணுவத்தால் நச்சுப்புகை அடிக்கப்படப்போகிறது என்ற எச்சரிக்கை மக்களை இன்னும் பதற்றப்படவைத்துக்கொண்டிருந்தது.

பலாலியில் ஓங்கியிருந்த இராணுவத்தின் கை, புத்தூர் வரை நீண்டுவிட்டிருந்து, அடுத்து நீர்வேலி கோப்பாய் இருபாலை என யாழ்ப்பாணம் பறிபோகப்போகிறது என்ற கருத்தினூடான மக்களின் அச்சங்கலந்த சம்பாசனைகள் சிறுவர்களான எங்களையும் கிலேசங்கொள்ள வைத்தது,ஆனால் விடுதலைப்புலிகளை குடும்பத்தில் ஒரு அங்கமாக பார்த்த தமிழ்ச்சமூகம் அப்போதும் அவர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை, பெடியள் ஏதும் செய்வாங்கள் என்பதுதான் அனைவரதும் கருத்தாக அன்று இருந்தது.

தமிழீழ வரைபடத்தின் அதிகூடிய சனத்தொகை கொண்ட நகரமாகிய யாழ்ப்பாணத்தின் அன்றைய மக்கள் தொகை கிட்டத்தட்ட நான்கில் இருந்து ஐந்து இலட்சமாக இருக்க வேண்டும்,சில தொகுதி மக்கள் கிழாலிக்கடலூடாக வன்னிக்குச்செல்லதாகவும், சில தொகுதி மக்கள் தென்மராட்சிக்கு செல்வதுதான் சரி என்றும்  முடிவெடுத்து இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள், எப்படியாவது புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுவதே தமக்கு பாதுகாப்பானது என்பதே மக்கள் அனைவரதும் எண்ணமாக இருந்தது, ஒரே இரவில் வீதிக்கு இறங்கிய பெருந்தொகை மக்களால் நிரம்பி வழிந்தது யாழ்ப்பாணம்.

விவரம்புரியாத வயதில் நாம் மூட்டைமுடிச்சுகளுடன் அடுத்து என்ன நடக்கும் என அறியாதவர்களாய் நடந்துகொண்டிருந்தோம், பல நேரங்களில் என்னையும் என் அண்ணனையும் அம்மா தூக்கி வைத்துக்கொண்டு நடப்பார்,அப்பா மற்ற அண்ணனையும் அக்காவையும் தூக்கிக்கொள்வார், சிலகணங்களில் கூட்டத்தில் தொலைந்துபோன சொந்தங்களை கூவிக்கூவி கத்தியபடியே நாங்கள் கண்டுபிடிப்போம்,சின்ன  சுடுதண்ணிப்போத்தலில் இருந்த தேனீர் இருவது பேருக்கு போதுமானதாக இருக்கும், ஒரு இறாத்தல் பாணில் ஒரு ஊரே பசியாறும் சம்பவங்கள் அத்தனையும் கால்நடையாக ஊர் இழந்து சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாண சமூகத்தில் அரங்கேறிக்கொண்டிருந்தது,

இப்போது இருக்கும் பல பெற்றோர்கள் உழைத்து பணம் சேர்ப்பதுதான் பெரிய தியாகம் என நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்,இந்த இடத்தில் நான், காற்றில்லாத சைக்கிளில் பின்னால் உடமைகளையும் முன்னால் இரண்டு பிள்ளைகளையும் ஏற்றிக்கொண்டு 25 கிலோமீட்டர் குண்டும்குழியுமான வீதியில் செல்லடிக்கு மத்தியில் தம் கால்வலிக்க ஓடிச்சென்ற எம் தாய்தகப்பனை நினைத்துப்பார்க்கின்றேன்,

வானில் வட்டமிட்ட குண்டுவீச்சு விமானங்களின் சத்தம் இடம்பெயர்ந்துகொண்டிருந்த மக்களின் மனதில் பயத்தை விதைத்தது, ஆங்காங்கே குண்டுகள் வீசப்படுவதாக கிடைத்த தகவல்கள் உயிரின் ஆணிவேரை அசைத்துப்பார்ப்பதாய் இருந்தது, காலையில் சனத்தால் நிறைந்திருந்த நாவற்குழிப்பாலம் மக்களுக்கு வெயிலின் தகிப்பை உணரக்கொடுத்தது, ஆமை வேகத்தில் ஊர்ந்துகொண்டிருந்த சனத்திரழ் பாலத்தின் உறுதியின்மையால் நத்தை வேகமாகியது, சில விடுதலைப்புலி அண்ணன்கள் மக்களின் போக்குவரத்தை சீர்படுத்தி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்,

நாவற்குழிப்பாலத்தை இரவில் கடக்க முற்பட்ட பலர் நீரில் மூழ்கி இறந்த சம்பவங்கள் அடுத்தநாள்தான் தெரியவந்தன, காணமல் போனவர்களை தேடும் ஒலிபெருக்கிகள் கதறியவண்ணமே இருந்தன, வானத்தை விலக்கி பொழிந்த மழை ஏக்கத்தில் இருந்த மக்கள் தாகத்தை தீர்த்தது.

வயதானவர்களையும், நோயாளிகளையும் கொண்ட குடும்பங்கள் பட்ட துன்பம் சொல்லில் அடங்காது, துலைந்துபோன குழந்தைகளை தேடியபடி அலைந்த தாய்களின் கதறல் காற்றோடு காற்றாய் கேட்டுக்கொண்டிருந்தது,பணத்தின் மதிப்பை அரை இறாத்தல் பாண் தகர்த்தெறிந்தது, தண்ணி கேட்க தட்டப்பட்ட கதவுகள் பல சாப்பாடும் தந்தது, சில கதவுகள் முகத்தில் அறைந்ததாற்போல் பூட்டியும் கொண்டது, காலைக்கடன் கழிப்பதே பெரும் மானப்போராட்டமாகியது.ஒப்பாரியும் ஓலமும் ஈழத்தின் பெருநகரின் வீதியெங்கும் ஒலிக்க நடந்து நடந்து ஒருவளியாக சாவகச்சேரியை வந்தடைந்தோம், சாவகச்சேரி பொதுச்சந்தையில் ஒரு தூணின் கீழே சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்ட நாம் அன்று அமர்ந்திருந்தோம்.

தெரிந்தவர்கள் இருந்தவர்கள் அவர்கள் வீடுகளுக்குச் சென்றார்கள், யாரையும் தெரியாதவர்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள்கீழ் தஞ்சமடைந்தார்கள், தென்மராட்சி மண் அன்று தஞ்சமென்று வந்த அனைவரையும் அரவணைத்து நின்றது.

அதன்பின் இரண்டு மாதங்களில் யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் முற்றுமுழுதாக விழுந்தது, அதை புலிகளின் குரல் றேடியோவில் கேட்டுக்கொண்டிருந்த தாத்தாவின் கண்ணில் இருந்து விழுந்த இரண்டு செட்டு கண்ணீர் அருகே இருந்த என் காலில் பட்டுத் தெறித்தது….

  •  
  •  
  •  
  •  
  •